முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் வ.உ.சி நகர் 7-வது தெருவில் பிரபல ரவுடியான ஜாகிர் உசேன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது எண்ணூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்பட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தற்போது ஜாகிர் உசேன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் காமராஜர் நகர் 7-வது தெருவில் இருக்கும் ரயில்வே தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் ஜாகிர் உசேனை சுற்றி வளைத்தது. இதனை அடுத்து அவர்கள் ஜாகிர் உசேனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜாகிர் உசேன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஜாகிர் உசேனின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்திக், ரமேஷ் குமார் அருண்குமார், கிஷோர் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரவுடியான சுந்தர் மற்றும் அருண்குமாரை பொதுமக்கள் முன்னிலையில் ஜாகிர் உசேன் கத்திவாக்கம் மார்க்கெட் பகுதியில் வைத்து அடித்துள்ளார். இதனை அடுத்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒத்த கை மூர்த்தியை கொலை செய்த வழக்கில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுந்தர் மற்றும் அருண் குமாரை போலீசார் கைது செய்தனர் b இதனை அடுத்து ஜாமினில் வெளியே வந்த அருண்குமார் தனது கூட்டாளிகளுடன் இணைந்து முன் விரோதம் காரணமாக ஜாகிர் உசேனை கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ராஜேஷ் மற்றும் நிஜாமுதீன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.