சுனாமியின் போது காணாமல் போன ஐந்து வயது மகனை 21 வயதில் தாய் கண்டு பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் சுனாமியின் போது தனது ஐந்து வயது மகனை தொலைத்து 16 வருடங்கள் கழித்து பெரும் போராட்டத்திற்கு பிறகு கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சுனாமி ஏற்பட்ட சமயம் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தேன். சுனாமி ஏற்பட்டதை தொடர்ந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது எனது ஐந்து வயது மகனை காணவில்லை. சுற்றிலும் பலரது அழுகுரல் கேட்டது. நானும் எனது மகனை தேடி அலைந்தேன். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
பிறகு மருத்துவமனையில் பலர் காயமடைந்து அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் அறிந்து மருத்துவமனையில் வரவு புத்தகத்தில் எனது மகனின் பெயரை பார்த்தேன். ஆனால் எனக்கு அதில் பெரும் ஏமாற்றம் கிடைத்தது. பெற்றோர் என்று கூறி எனது மகனை வேறு யாரோ கூட்டி சென்று இருந்தனர். சோகத்தை அடக்க முடியாமல் கதறி அழுத என்னை எனது மகன் மரணம் அடையவில்லை என்ற செய்தி ஆறுதல் அடைய செய்தது. தொடர்ந்து எனது மகனை தேடும் பணியில் இறங்கினேன். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.
ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் அம்பாறை மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் எனது மகனை தேடினேன். மகனின் சிறுவயது புகைப்படத்தை வைத்து பலரிடம் காட்டி மனநல நோயாளி போல் சுற்றி திரிந்தேன். இறுதியாக எனது மகன் படிக்கும் பள்ளியை கண்டுபிடித்தேன். சிங்கள பள்ளியில் நான் வைத்த அதே பெயரில் அவன் படித்துக் கொண்டிருந்தான். அந்த பள்ளியின் முதல்வரை சந்தித்து எனது மகன் குறித்த தகவலை கூறினேன். ஆனால் அவர் என்னை அவமானப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றினார். அதோடு எனது மகனை வளர்த்து வந்தவர்களுக்கும் இதுபற்றிய தகவல் சென்றுள்ளது.
ஆனாலும் எனது மகனை மீட்கும் செயலை கைவிடாமல் தொடர்ந்து செய்து வந்தேன். ஆடை வியாபாரி, பொருள் வியாபாரி போன்று பல வேடங்கள் போட்டு மகன் இருந்த வீட்டை கண்டுபிடித்தேன். ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் எழுதியது வரை பல இடங்களுக்கு சென்று உதவிகளை கேட்டேன். ஆனால் எந்த துறையும் எனக்கு உதவவில்லை. இதனால் நேரடியாக எனது மகனை பார்த்து நான் தான் உனது அம்மா என்னுடன் வருகிறாயா என அவன் வளர்ந்து வந்த வீட்டிற்கே சென்று கேட்டேன். அவன் என்னுடன் வருவதற்கு சம்மதித்தான்.
என்னுடன் சந்தோஷமாக அவனை அழைத்து வந்துவிட்டேன். இறைவன் என்னை கைவிடவில்லை. தொலைந்து போன எனது மகன் 16 வருடங்களுக்கு பிறகு என்னிடம் வந்து சேர்ந்து விட்டான். ஐந்து வயதில் காணாமல் போன ரஸின் முகம்மட் இன்று ஹிந்தி நடிகர் போல் வளர்ந்து இருக்கின்றார்” என கண்ணீர் மல்க கூறினார். மேலும் மகனை வளர்த்தவர்கள் அவனை சந்திக்க வந்தால் தான் மறுப்புக் கூற மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.