சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஜெய் வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் வீராப்பு, ஐந்தாம் படை உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் பத்ரி. தற்போது இவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் பட்டாம்பூச்சி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகை ஹனிரோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் பத்ரி, ‘அமைதியாக வாழ நினைக்கும் ஒரு போலீஸுக்கும், தொடர்ந்து பல கொலைகளை செய்து கொண்டிருக்கும் சைக்கோ கொலைகாரன் ஒருவனுக்கும் இடையில் நடக்கும் பூனை- எலி ஆட்டம் தான் இந்த படத்தின் கதை .
போலீஸாக சுந்தர்.சியும், சைக்கோ கொலைகாரனாக ஜெய்யும் நடிக்கின்றனர். சுந்தர்.சியின் ஆறடி உயரமும், அவரது தோற்றமும் அவர் போலீஸ்காரர் என நம்பும்படி இருக்கும். அதன் அடிப்படையில் தான் அவர் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. அதேபோல் பார்ப்பதற்கு கொலைகாரனாக தெரியாத, ஒரு அழகான ஆள் வில்லன் கேரக்டருக்கு தேவைப்பட்டது. முதலில் ஜெய் வில்லனாக நடிக்க மறுத்தார். பின் சுந்தர்.சி மீது கொண்ட மரியாதையின் காரணமாக இந்த படத்தில் நடிக்க ஜெய் ஒப்புக் கொண்டார்’ என தெரிவித்துள்ளார்.