புதுக்கோட்டையில் நம் தமிழர் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு என்பது நம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டாகும். தற்போது பொங்கல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வரும் காளைகளை அடக்குவதற்கு 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு தஞ்சாவூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை என தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட காளை மாடுகள் புதுக்கோட்டைக்கு வந்தன. இப்போட்டியில் கலந்துகொண்டு காளை மாடுகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அவர்கள் பிடியில் அடங்காமல் சீறி செல்லும் காளைகளுக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, கட்டில், குக்கர், என பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.