பல லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொளுத்துவாஞ்சேரி அண்ணா நகரில் கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பினார். எனவே தனது மனைவியின் தம்பி ராமநாதனிடம் தனது விருப்பம் குறித்து கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் டாக்டர் சீட் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு முருகன் நேரடியாகவும் வங்கி கணக்கிலும் 63 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வரை வாங்கியதாக தெரிகிறது. ஆனால் சொன்னபடி முருகன் மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கதிரவன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்து விட்டனர்.