சீட்டாட்டத்தால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி பணத்தை பறிக்க முயன்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் சின்னசூரி பகுதி சேர்ந்த ஆர்.எஸ்.ஆர் ரமேஷ் என்பவரது ஆதரவாளர்களுக்கும் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த பப்ளு என்பவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே சீட்டாடிய பணத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை இருந்து வந்திருக்கின்றது. நேற்று முன்தினம் ரமேஷின் பனந்தோப்பில் வெட்டு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட பொழுது அங்கு வந்த பத்திற்கும் மேற்பட்ட பப்ளு தரப்பினர் ரமேஷ் தரப்பினரிடம் சீட்டு ஆடிய பணத்தை பறித்துச் செல்ல முயன்றார்கள்.
இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள். இதில் தக்காளி மண்டி உரிமையாளர் தீன் என்பவரை அறிவாளால் வெட்டினார்கள். நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் தீனின் நெஞ்சில் காயம் ஏற்பட்டது. மேலும் அரவிந்த் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.