தமிழகத்தில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களிலும் அரசு ஊழியர்கள், மக்களுக்கு தனது பணியை தொடர்ந்து செய்து வந்தனர். அதிலும் குறிப்பாக மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் இரவு பகல் பாராது தொடர்ந்து பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு, அரசு ஊழியர்களை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதம் ஆக வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருத்தவர்களுக்கு 14 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெறவுள்ள மாநில சிவில் சர்வீஸ் டென்னிஸ் போட்டிக்கு அரசு ஊழியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திகுறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் 3ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 2022ஆம் வருடத்துக்கான மாநில சிவில் சர்வீசஸ் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள அரசுப் ஊழியர்கள் சென்னையில் உள்ள டென்னிஸ் அரங்க அலுவலரிடம் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் 6ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய போட்டியிலும், சண்டிகரில் நடைபெறும் அகில இந்திய போட்டியிலும் கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.