7-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை கிராம மக்கள் அடித்து உதைத்து கார் கண்ணாடியை உடைத்தார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் தேன்கனிகோட்டை அருகில் கும்பகரை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 4 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றார்கள். இந்தப் பள்ளியில் மொத்தம் 102 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று தலைமை ஆசிரியர் லாரன்ஸ் மட்டும் பள்ளிக்கு சென்றார். மீதமுள்ள மூன்று ஆசிரியர்களும் பள்ளி நிமித்தமான கூட்டத்திற்கு சென்று விட்டார்கள். அப்போது பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியர் அந்த பள்ளியில் படித்து வருகின்ற 7-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்து போன மாணவி உடனே அங்கிருந்து வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார்.
இதை அறிந்து கோபமடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் என 20க்கும் அதிகமானோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். இதனையடுத்து ஆத்திரத்தில் அவர்கள் தலைமை ஆசிரியர்கள் அடித்து உதைத்து வன்மையாகத் தாக்கினார்கள். அதன்பின் தலைமையாசிரியர் தப்பித்தோம், பிழைத்தோம் என்று காரில் ஏறி அங்கிருந்து தேன்கனிக்கோட்டைக்கு செல்ல முயன்றபோது, அவர்கள் பின் தொடர்ந்து சென்று கார் கண்ணாடியை உடைத்து, கல்லை வீசி தாக்கினார்கள்.
இதனையடுத்து தலைமையாசிரியர் அவர்களிடமிருந்து உயிர் பிழைத்து தேன்கனிகோட்டைக்கு சென்று விட்டார். இத்தகவலை அறிந்த அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இத்தகவலை அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன், காவல் துறையினர் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.