கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். கொரோனா வைரஸால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் பல நாடுகள் பொருளாதார இழப்பீடு வழங்குகின்றன என்றும் பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனை தொடந்து பேசிய துணை தலைவர் துரைமுருகன், நாட்டையே புரட்டி போட்டுவிட்டது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் காரணமாக டாஸ்மாக் சட்டமன்றத்தை தவிர கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூலி வேலையாட்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி கட்ட கூட வியாபாரிகளிடம் பணம் இல்லை. இதனால் சிறு வியாபாரிகளுக்கு 6 மாதத்திற்கு விலக்கு அளிக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர், ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து 6 மாதங்கள் விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்தார். மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் இந்த பிரச்சனை குறித்து மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இந்த வைரஸால் இதுவரை இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.