கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து உதைத்து சித்ரவதை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் ரோட்டில் வசித்து வருபவர் வசந்தா இவருக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். வசந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வசந்தாவின் வீட்டில் தனியாக சந்தித்து கொள்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் யோகேஷ் வசந்தாவின் வீட்டுக்கு வரும்பொழுது இருவரும் சிறுவனை வீட்டைவிட்டு வெளியேறும்படி வற்புறுத்தி அடித்து உதைத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமைப் படுத்தியதாகவும் தெரியவருகிறது. இந்த சம்பவம் குழந்தைகள் நலத்துறை அதிகாரி ரங்கநாதன் கவனத்துக்கு வரவே ரங்கநாத் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு சென்று கள்ளக்காதல் ஜோடியிடம் இருந்து சிறுவனை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனின் தாய் மற்றும் அவருடைய கள்ளக்காதல் யோகேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.