சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரத்தில் என்ஜினீயரான ராஜேஷ் குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜேஷ்குமாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் நீதிபதி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.