ஏழுமலையான் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட் வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதியில் உலக பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து இருப்பதால், பல்வேறு சேவைகளுக்கு தேவஸ்தான படிப்படியாக அனுமதி வழங்கி வருகிறது.
இந்த சூழலில் வரும் 8ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஏழுமலையான் தரிசன வசதியை ஏற்படுத்திக் கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வரும் 8ஆம் தேதி முதல் ஆன்லைனில் வினியோகம் செய்யப்படும். வரும் 8ஆம் தேதி காலை 11 மணி முதல் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்னுரிமை தரிசனத்திற்கான டோக்கன்களை வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் இதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் தேவஸ்தான இணையதளத்தில் ஆன்-லைனில் வெளியிடப்படும் எனவும் ஒரு நாளைக்கு 1000 டோக்கன்கள் வீதம் ஆன்லைனில் வழங்கப்பட இருக்கிறது. டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 19ஆம் தேதி முதல் தினமும் காலை 10 மணிக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மூன்று மணி முதல் ஏழுமலையானை வழிபட அனுமதி வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.