சிறப்பு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றுவருகின்றது. அதுமட்டுமில்லாமல் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் தினமும் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வைத்திறன் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடு உடையவர்கள் மற்றும் கை கால்களில் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மனவளர்ச்சி குன்றியோர்காக மொத்தம் 22 பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது.
அந்த பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து மாற்றுத் திறனாளி நலத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும், சிறப்பு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு சீருடை, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அரசு உதவியுடன் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கல்வி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே 5 முதல் 35 வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.