மாசி மகத்தை முன்னிட்டு மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது.
கோவில் நகரமான கும்பகோணத்தில் மாசிமகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், கௌதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர், கொட்டையூர் கோடீஸ்வரர் சாமி போன்ற 12 சிவன் கோவில்களில் இருந்தும் சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு மகாமக குளத்தை வந்தடைந்தனர்.
அதன்பின் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் உள்ள குளத்தின் படிக்கட்டுகளில் நின்று 12 கோவில்களிலும் உள்ள அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், தேன், திரவியம், மஞ்சள் போன்ற 12 வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்து தீர்த்தவாரி நடைபெற்ற்றது. அதன் பின் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களின் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் புனித குளத்தில் நீராடியுள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட டி.ஐ.ஜி கயல்விழி தலைமையில் 350 காவல் துறை அலுவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு துறை வீரர்களும் ரப்பர் படகுகளில் குளத்தை சுற்றி தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.