புகைப்பட கலைஞர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன பாரண்டபள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த பள்ளிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் இருக்கிறது. மேலும் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலை சேறும், சகதியுமாக இருக்கிறது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் புகைப்பட கலைஞரான பட்டாபிராமன் என்பவர் அப்பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறியுள்ளார். அதன்பிறகு பட்டாபிராமன் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாபிராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சாலையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பட்டாபிராமன் கீழே இறங்கி வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.