சிபிஎஸ்இ தேர்வு குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் கூறியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன . இந்த ஆண்டு தேர்வு முறை இரண்டு பருவமாக பிரிக்கப்பட்டு முதல் பருவ தேர்வு கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இரண்டாம் பருவ தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் இரண்டாம் பருவ தேர்வு குறித்து இணையத்தளங்களில் பல வதந்திகள் பரவிவருகின்றன. இதுகுறித்து சிபிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
அதாவது ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி சிபிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் “முக்கிய அறிவிப்பு “என்று தலைப்பிடப்பட்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் அறிவித்துள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல் என கூறியுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதி கடந்த ஆண்டு ஜூலையில் தேர்வு முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படியே முதல் பருவத் தேர்வு நடைபெற்றது. இரண்டாம் பருவ தேர்வு அதன்படிதான் நடைபெறும் மற்றபடி மாணவர்கள் இணைய தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.