ஒடிசாவில் தனது மனைவியை விற்று அந்தப் பணத்தில் கணவன் ஸ்மார்ட்போன் வாங்கிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது சிறுவனுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரன் என்ற கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு தினக் கூலி வேலைக்காக சென்றுள்ளனர். அப்போது 17 வயதே ஆன இந்த கணவன் தனது மனைவியை கிராமத்தில் உள்ள ஒரு 55 வயது முதியவருக்கு சுமார் 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். மேலும் சிறுவன் அந்த பணத்தை தனது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு ஒரு புதிய ஸ்மார்ட்போனும் வாங்கியுள்ளார்.
பின்னர் தனது சொந்த ஊருக்கு திரும்பிய அந்த சிறுவன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாக நாடகமாடி உள்ளார். ஆனால் இதனை நம்பாத பெண்ணின் வீட்டார் இந்த சிறுவன் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சிறுவனை கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணையில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து சிறுவன் தனது மனைவியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள முதியவர் ஒருவருக்கு விற்பனை செய்ததை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை மீட்க ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் பெண்ணை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
ஆனால் உள்ளூர் வாசிகள் அந்தப் பெண்ணை முதியவர் 1.8 லட்சத்துக்கு வாங்கியதால் அந்த பணத்தை திரும்ப செலுத்தி விட்டு பெண்ணை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இருப்பினும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அப்பெண்ணை மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த 17 வயது சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சரியான திருமண வயதை எட்டாதவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.