இசையமைப்பாளர் ஏ. ஆர் . ரகுமான் இளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சினிமா துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு ஒன்றை பிரிட்டிஷ் அகாடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (பாப்டா) மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு சினிமா , தொலைக்காட்சித் துறையில் திறமையான 5 நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது. இந்தியா சார்பாக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இந்த அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் சினிமா மற்றும் டிவி துறையில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களின் திறமையை வெளியில் கொண்டு சென்று பிரபலப்படுத்தும் வகையில் ஏ. ஆர். ரகுமானின் பங்களிப்பு இருக்கும். நெட்பிளிக்ஸ் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய முயற்சிக்கு இந்தியாவின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ. ஆர். ரஹ்மான் பாப்டாவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். மேலும்இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உலக அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் அந்த அற்புதத் திறமைகளைக் காண ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.