பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காசான்கோட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலின் முகப்பு பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாலை நேரத்தில் ஊருக்கு வந்த டவுன் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.