சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான புகார்களுக்கு விளக்கம் அளிக்க தீட்சிதர்கள் சபைக்கு அறநிலை துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. கடந்த மாதம் 20, 21 தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான திருக்கோவில் நலனில் அக்கறை கொண்ட நபர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன் மூலம் 19,405 மனுக்களில், 14,098 மனுக்களில் திருக்கோவில் நிர்வாகத்தின் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுக்களில் சொல்லப்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிதம்பரம் கோவில் பொது தீட்சிதர் சபையின் செயலாளருக்கு விசாரணை குழு ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.