இலங்கையில் பொருளாதார பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா அந்நாட்டுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் அவசரகால உதவியாக இலங்கைக்கு ரூ.3 ஆயிரத்து 737 கோடி கடன் வழங்க முன்வருவதாக கடந்த மாதம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஜி எல் பீரிசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இந்தியா கடந்த வாரம் இலங்கையின் அன்னிய செலவாணி இருப்பை மேம்படுத்தும் விதமாக ரூ.2,990 கோடியை பணபரிமாற்ற திட்டத்தில் வழங்கவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை தலா 40 ஆயிரம் டன் வாங்கவும் இலங்கை முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.