மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சித்திவிநாயகபுரம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையிலுள்ள ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவின் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சில நாட்களாக செல்வகுமார் உடல்நிலை குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
அதன்பின் செல்வகுமாரின் சடலம் அவரது சொந்த ஊரான சித்திவிநாயகபுரம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து சித்திவிநாயகபுரம் கிராமத்திலுள்ள மயானத்தில் வைத்து செல்வகுமாருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. பின்னர் 21 குண்டுகள் முழங்க இன்ஸ்பெக்டர் செல்வகுமாரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.