குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர கோரிய வழக்கில் தமிழக அரசும், டிஜிபியும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் இதுவரை 42 பேர் உயிரிந்துள்ளனர். இதேபோல தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வண்ணாரப்பேட்டையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனிடையே மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தலைமையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அதேசமயம் வண்ணாரப்பேட்டையில் கடந்த 14ம் தேதி தொடங்கிய போராட்டம் இரண்டு வாரங்களாக தொடர்ந்து கொண்டுள்ளது.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போராட்டக் குழுவினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென சந்தித்துப் பேசினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாட்டு ஏற்படாததால் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிஏஏவுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டங்ளை முடிவுக்கு கொண்டு வர கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனுமதியின்றி நடத்தப்படும் போராட்டங்கள் தொடர்பாக காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்காக காவல்துறை ஏன் காத்திருக்க வேண்டும்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிஏஏ போராட்டம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து 13ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசு, டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.