குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க நாளை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது.
இதனிடையே மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க நாளை தமிழக அரசு சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து விதமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் பதில் அளிக்க உள்ளனர். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்க தலைமை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.