சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். சிஏஏ சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கையெழுத்து பிரதிகள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேற்று முன்தினம் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும் கையெழுத்து இயக்கம் நடத்தி பெறப்பட்ட படிவத்தையும் ஒப்படைத்துள்ளனர். இந்திப்பின்போது திமுக எம்.பி கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சந்திப்பு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை எனவும், மக்கள் அமைதியாக போராட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்ததாக கூறினார. மேலும் தங்கள் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.