யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்..
டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அளித்த பேட்டியில், ஒரு சிறந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில் இருக்க நாங்கள் விரும்புகிறோம். இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறாமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், நாங்கள் நிச்சயமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்றார்..
மேலும் உலகக் கோப்பையில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு எந்த ஆட்டத்திலும் இடம்பிடிக்காதது ஆச்சரியமாக இருக்கிறதா என்று கேட்டபோது, பட்லர் கூறியதாவது: டி20 கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். விக்கெட்டுகளை வீழ்த்துவது ரன்களின் ஓட்டத்தைத் தடுக்கிறது. சாஹல் ஒரு சிறந்த பந்துவீச்சாளர், ஐபிஎல் போட்டியில் நான் அவருடன் விளையாடுவதை மிகவும் ரசித்துள்ளேன். அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர், அவர் விக்கெட்டுகளை வீழ்த்தகூடியவர். அவர் விளையாட அழைக்கப்பட்டால், அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர் ஆட வந்தால் எங்களுக்கு சவாலாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து புவனேஷ்வர் குமாரை எதிர்கொள்ள அவர் தயாராகி வருவது பற்றி பட்லர் கூறினார்: “அவர் (புவனேஷ்வர்) ஒரு நல்ல பந்து வீச்சாளர் ஆனால் நான் நிச்சயமாக அவரைப் பற்றி பயப்படவில்லை. “எனது சொந்த ஆட்டத்தில் நான் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நீங்கள் எதிர்கொள்ள கடினமாக இருக்கும் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு நல்ல நேரம் அல்லது கெட்ட நேரங்கள் என இருக்கும். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நான் எப்போதும் நன்றாக என்னை தயார் செய்கிறேன்” என்று கூறினார்.
ஜோஸ் பட்லர் சொல்வது போல சஹால் சிறந்த பவுலர் தான் என்றாலும் அணியில் தற்போது அஸ்வின், அக்சர் போன்ற போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் ஆடும் லெவனில் இருக்கின்றனர்.. அவர்கள் சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டுமல்ல ஆல் ரவுண்டர்களும் கூட.. அதனால் தான் சஹாலுக்கு இதுநாள் வரையிலும் வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே இக்கட்டான நிலையில் சற்று பேட்டிங் ஆட தெரிந்தால் அணிக்கு பலம் என்பதாலேயே தற்போது வரை அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.