தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் எஸ்.எஸ். நகரில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சுத்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகி திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வசந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் காலையில் அவர்களது வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் பெருமாநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேர் உடல்களையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.