சாலை விரிவாக்க திட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மயானத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சப்-கலெக்டர் அலுவகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் மனுக்களை வழங்கியுள்ளனர். அப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தினர் மற்றும் கோலார்பட்டியை சேர்த்த பொதுமக்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கோலார்பட்டியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் எங்க சமூகத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் அவர்களது உடலை பொள்ளாச்சி-பழனி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள மாயனத்தில் காலம் காலமாக அடக்கம் செய்து வருகின்றோம். இதனையடுத்து அரசின் சாலை விரிவாக்க திட்டத்திற்காக அப்பகுதியில் உள்ள சாலைகள் இருபுறமும் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே மாயானத்திற்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.