சாலை வசதி அமைத்து தருமாறு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தொண்டாந்தோப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் 100 ‘ க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆர்சுத்திப்பட்டு பகுதியிலிருக்கும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் வேலைக்கு செல்வதற்காகவும், தேவைப்பட்ட பொருள்களை வாங்க வேண்டுமென்றாலும் ஆர்சுத்திப்பட்டு பகுதிக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. தொண்டாந்தோப்பு பகுதியிலிருந்து ஆர்சுத்திப்பட்டு பகுதிக்கு செல்லும் பாதை அறநிலையத்திற்கு சொந்தமான இடமாகும்.
இந்த வழியை விட்டால் 3 கி. மீ தூரம் சுற்றிதான் செல்லமுடியும். இந்த நடைபாதையை அறநிலையத்துறை கம்பி வேலி போட்டு மறைக்க உள்ளது. எனவே இதை தடுத்து நிறுத்தி சாலை வசதி அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.