கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துவரும் வளர்ச்சிதிட்டப் பணிகள் தொடர்பாக துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலிலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக நடந்துவரும் இரணியல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட 97 பணிகள் தொடர்பாக கேட்டறியப்பட்டது. குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் கடந்த 2018-2019ன் கீழ் ரூபாய்.30.94 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப் பணிகளில் 82 % பணிகள் நிறைவடைந்துள்ளது.
குழித்துறை நகராட்சி பகுதியில் வசிக்கும் 6,755 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க முடிவுசெய்யப்பட்டு, இதுவரையிலும் 2,655 குடும்பங்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது குழித்துறை நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒருநபருக்கு 96 லிட்டர் வீதம் 2 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் வரும் அக்டோபர் மாதம் நிறைவடையும்போது ஒரு நபருக்கு 135 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீதம் தினசரி வழங்க முடியும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அஞ்சு கிராமம், புளியடி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் வாயிலாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் காலியாகவுள்ள வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, புதுக்குளம் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு முடியும் தருவாயிலுள்ள குடியிருப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கன்னியாகுமரி- களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பணிகளில் மெத்தனமாக உள்ள அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார். இந்த கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் விஜய லெட்சுமி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, வீட்டு வசதி வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.