கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையோரம் இரண்டாவது நாளாக போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் தங்ககாசுகளை எடுத்ததால் பரபரப்பு நிலவியது.
ஓசூர் அருகே பாகலூர் சர்ஜபுரி சாலையில் நேற்று மாலை சாலையோரத்தில் உள்ள புதரில் சிறிய அளவிலான தங்ககாசுகள் கிடந்துள்ளன. இதையடுத்து பாகலூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்க காசுகளை எடுத்து அங்கு குவிந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறிய அளவிலான தங்ககாசுகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தங்ககாசுகளின் மேல் உறுதி எழுத்துக்கள் இருப்பதால் இந்த தங்ககாசுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு சிலர் நகை கடைகளில் விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக பாகலூர் சர்ஜபுரம் சாலையில் தங்க காசுகளை எடுக்க பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் வந்ததால் கூட்டம் அதிகரித்தது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.