சென்னை விமான நிலையத்தில் அரை மணி நேரமாக சாலையோரம் போடப்பட்டிருந்த உடலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாவரம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக தீபக் பால் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், தனது நண்பர்களுடன் சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர்ந்து தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று 3.55 மணிக்கு விமானம் கிளம்ப தயாராகும் அரை மணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு உடல் வலிப்பு ஏற்பட்டு உள்ளது.
உடனே அவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் உடல் தேறிய நிலையில், அசாமிற்க்கு விமானம் மூலம் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை விமானத்துறை அதிகாரிகள் செய்தனர். ஆனால் இன்று அதிகாலை மீண்டும் அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டு உள்ளது. அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்தார்.
பின்னர் விமான நிலையத்திற்கு அவரது உடல் எடுத்துவரப்பட்டு,சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் போடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவரின் உடல் விமான நிலையத்தில் இருந்தது. அதன்பிறகு விமான நிலையத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் விமான நிலையத்தில் சற்று நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.