சாலையில் கிடந்த மணிபர்சை காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளார் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று அமைந்துள்ளது. இந்த பங்கில் ஏழுமலை என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு சாலை ஓரம் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த ஏழுமலை அந்த மணிபர்சை எடுத்து பார்த்துள்ளார். அதில் 8 ஆயிரத்து 450 ரூபாய் பணம், ஏ.டி.எம். , ஆதார் போன்ற அட்டைகள் இருந்துள்ளது. இதனையடுத்து ஏழுமலை அந்த மணிபர்சை அதே பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் ஆதார் அட்டையில் இருந்த முகவரியை வைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் மணிபர்சை தவறவிட்டது மகாதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாபு என்பதும், அவர் மோட்டார் சைக்கிளில் தெள்ளார் வழியாக சென்றபோது மணிபர்சை தவறவிட்டதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் பிரபுவிடம் மணி பர்சை ஒப்படைத்துள்ளனர. இதனை பெற்று கொண்ட பாபு ஏழுமலைக்கு கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளார். மேலும் ஏழுமலையை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.