காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மினிவேன் போடிமெட்டு சாலையில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு மினிவேன் ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் போடிமெட்டு வழியாக சென்ற அந்த வேன் முதல் கொண்டை ஊசி வளைவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் வேன் டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக காயமடைந்த வேன் டிரைவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போடி காவல்துறையினர் சாலையில் கவிழ்ந்த மினிவேனை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.