கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் நகரில் நாகராஜ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரவடிவு(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சாய்சங்கர்(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகராஜ் ஈரோட்டில் இருக்கும் தனது மாமனார் வீட்டிற்கு மனைவி மற்றும் மகனுடன் காரில் சென்றுள்ளார். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் இருந்த கல்லில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகராஜ், சங்கரவடிவு, சாய்சங்கர் ஆகிய 3 பேரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சங்கரவடிவு பரிதாபமாக இறந்துவிட்டார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.