தார் ரோட்டில் குழிகளை செப்பனிட ஒரு வாட்ஸ்அப் எண்ணை கோவை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் ஏரியாவிலுள்ள குழிகளை புகைப்படம் எடுத்து விவரங்களுடன் இந்த எண்ணுக்கு அனுப்பலாம். அதாவது கோவைமாநகராட்சியின் பல பகுதிகளில் பயணிக்கவே முடியாத அளவுக்கு உள்ள ரோடுகள், இப்போது தமிழக நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சாலையின் அகலம் உள்ளிட்ட அளவீடுகள் சரியாக இருப்பதுடன் தரமான ரோடுகளை அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் இரவு, அதிகாலை என்று மாநகராட்சி உயர்அதிகாரிகள் திடீரென்று வருகை புரிந்து ரோட்டின் தரத்தை உரிய உபகரணங்கள் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
எனினும் விளாங்குறிச்சி ரோடு உட்பட பல மோசமான சாலைகள் விமோசனத்துக்காக காத்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் தார் ரோடுகளில் ஏற்பட்டுள்ள குழிகளை செப்பனிட, 81476 84653 என்ற வாட்ஸ்அப் எண்ணை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எண்ணிற்கு சேதமடைந்த பகுதியின் புகைப்படம் மற்றும் இருப்பிடத்தை பொதுமக்கள் அனுப்பிவைக்கலாம். இந்த பணிகளை மாநகராட்சியுடன் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் இணைந்து மேற்கொள்ள இருக்கிறது. அந்த நிறுவனத்தின் மேலாளர் ஜெயந்த் மல்லிக் கூறியதாவது “சாலைகளிலுள்ள குழிகளை செப்பனிட கோல்டு மிக்ஸ் கலவை பயன்படுத்தப்படுகிறது.
அதாவது வெயில், மழை என்று எந்த சீதோஷ்ணத்திலும் எளிதில் செட் ஆகக்கூடிய கற்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு தராத ‘எமல்சன்’ கலவை சேர்க்கப்படுகிறது. இதற்கிடையில் புகார் பெறப்படும் இடங்களுக்கு சென்று உடனடியாக நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். அதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது “பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் பரீட்சார்த்த அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்கிறது. இதன் காரணமாக குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்படும். இந்த திட்டத்தின் வெற்றியை பொறுத்து பணிகளுக்கு நீட்டிப்பு வழங்க பரிசீலிக்கப்படும்”என்று கூறினார்.