மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மனுதாரருக்கு 2016 ஆம் ஆண்டு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், அவருக்கு பெண் உறுப்பு இல்லை என்றும், 3 வயது ஆண் குழந்தைக்கு இருப்பதை போல் ஆண் உறுப்பு இருந்ததையும் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக மனுவில் குறிப்பிட்டு உள்ளார். தனது மனைவிக்கு மற்ற பெண்களுக்கு இருப்பதை போல் பெண் உறுப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதனை முன்பே அறிந்து தனது மனைவி திருமணம் செய்துகொள்ள விருப்பமின்றி இருந்துள்ளதாகவும், ஆனால் அவரது குடும்பத்தினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் கணவர் குறிப்பிட்டு உள்ளார்.
தனது மனைவிக்கு இந்த குறைபாடு இருப்பது தெரியவந்தவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், ஹார்மோன் குறைபாடு காரணமாக இத்தகைய பிரச்சனை ஏற்பட்டு உள்ளது தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் தனது மனைவியின் தந்தையும் அவரது உறவினர்களும் வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து இந்து திருமண சட்டப்படி தனது மனைவி மற்றும் அவரது தந்தை மீது கணவர் மோசடி புகார் அளித்து இருக்கிறார்.
அதே நேரம் அவரது மனைவியும் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக அளித்த புகாரின் அடிப்படையில் ஐ.பி.சி 498A பிரிவின் கீழ் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் தனது மனைவி மற்றும் அவரது தந்தை மீது மோசடி வழக்கு பதிவு செய்திடக்கோரி குவாலியர் மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவரது மனுவை தள்ளுபடி செய்த மாவட்ட நீதிமன்றம், வழக்கு தொடர்பாக மருத்துவ ஆதாரங்கள் இல்லை எனக்கூறியது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் மருத்துவ பரிசொதனை மேற்கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து கணவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் மனைவி மீது மாவட்ட விசாரணை நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய ஆணையிட்டது. அதன்பேரில் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 மற்றும் 448 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை இடைக்காலமாக ரத்து செய்தது. மருத்துவ சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே உத்தரவிட முடியும் எனத் தெரிவித்த நீதிமன்றம், வாய்மொழி புகார்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கணவர் தொடர்ந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் சமர்பிக்கப்பட்டுள்ள மருத்துவ ஆதாரங்களை பார்வையிட்ட உயர்நீதிமன்றம் இதுகுறித்து விளக்கமளிக்குமாறு பெண்ணின் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.