உத்திரபிரதேச மாநிலம், பரேலி பகுதியில் வசித்து வரும் சுனில் குமார் காஷ்யப் – குசும் காஷ்யப் தம்பதியினருக்கு எட்டு மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். சுனில் தனது குடும்பத்துடன் மின் இணைப்பு இல்லாத ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் சூரிய ஒளி தகடு பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கி வந்தார். வழக்கம் போல் சுனில் தனது மொபைல் போனுக்காக அந்த பேனல் மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி சார்ஜ் போட்டுள்ளார்.
6 மாதத்திற்கு முன்பு வாங்கப்பட்டதாக கூறப்படும் மொபைல் போன் பேட்டரி வீங்கிய நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த போனை சார்ஜ் போட்ட போது பேட்டரி வெடித்து சிதறியது. இதில் வெடித்து சிதறிய பேட்டரி அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவர்களின் எட்டு மாத கைக்குழந்தை மீது பட்டது. இதில் அந்த குழந்தை மீது மின் பாய்ந்ததில் மயக்கம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. செல்போன் பேட்டரி வெடித்து எட்டு மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.