இலங்கை அணி வெற்றி பெற்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடியதை விட ஆப்கானிஸ்தான் ரசிகர்களும், ஒட்டுமொத்த நாடும் கோலாகலமாக கொண்டாடியது வைரலாகி வருகிறது.
15வது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நேற்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் நிஷாங்கா 8, குஷால் மெண்டிஸ் 0, தசுன் ஷனாக 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றியதால் இலங்கை ஆரம்பத்திலிருந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த அணி 8.5 ஓவரில் 58/5 என இருந்தது.
இதனால் இலங்கை அணி 100 ரன்களை கூட தாண்டாது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் 6ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹசரங்காவும், ராஜபக்சேவும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹசரங்கா 5 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 36(21) ரன்களில் ஆட்டம் இழந்தாலும், இறுதிவரை நின்ற ராஜபக்சே 6 பவுண்டரி, 3 சிக்ருடன் 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து சிறப்பான பினிஷிங் கொடுத்ததால் தான் அந்த அணி 170 ரன்களை தொட்டுள்ளது.
இதையடுத்து 171 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இருவரும் களமிறங்க, மதுஷன் வீசிய 4ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் பக்கர் ஜமான் 0 ரன்னில் ஆட்டம் இழந்ததால் பாகிஸ்தானுக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது.. 22/2 என தவித்த அந்த அணிக்கு 3ஆவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது.
வழக்கம்போல முகமது ரிஸ்வான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜோடியாக இப்திகார் அகமது (32 ரன்கள்) போராடி ஆட்டம் இழந்தார். மேலும் முடிந்தவரை போராடிய முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 55(49) ரன்கள் எடுத்த நிலையில், நெருக்கடியான கட்டத்தில் ஆட்டம் இழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. அதன்பின் வந்த வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியதால் 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்து பாகிஸ்தான் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசன் 4 விக்கெட்டுகளும், ஹசரங்கா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 6 ஆவது முறையாக ஆசிய கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி கோப்பையை வென்றதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. ஏனென்றால் ஐசிசி தரவரிசை பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் அந்த அணி இளம் படைகளை வைத்து முக்கிய போட்டியில் தைரியமாக விளையாடி 6ஆவது முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கி உள்ளது.
இந்நிலையில் இலங்கை அணி வெற்றி பெற்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடியதை விட ஆப்கானிஸ்தான் ரசிகர்களும், ஒட்டுமொத்த நாடும் கோலாகலமாக கொண்டாடியது வைரலாகி வருகிறது. ஏனென்றால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4ல் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில், வெறும் 129 ரன்கள் கட்டுப்படுத்த கடைசி வரை போராடியது. ஆனால் இறுதியில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்யாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டி சார்ஜாவில் பரபரப்பாக நடைபெற்ற போது, கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட பாரூக்கி தொடர்ந்து 2 புல்டாஸ் வீச தொடர்ந்து 2 சிக்ஸர்களை பறக்க விட்டு நசீம் ஷா ஆட்டத்தை மாற்றி அமைத்தார். இது ஆப்கானிஸ்தானால் மறக்க முடியாத தோல்வியாக மாறியது.
அதே போல அந்த போட்டியில் ஃபரீத் அகமது வீசிய 18.5 ஆவது ஓவரில் ஆசிப் அலி சிக்ஸர் அடிக்க முயன்று அவுட் ஆனார். பின் ஃபரீத் அகமது ஆசிப் அலி அருகே சென்று விக்கெட்டை கொண்டாடியபோது இருவருக்கும் இடையே மோதலானது. பரீத்தை பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி பேட்டால் அடிக்க ஓங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.. இதையடுத்து போட்டி முடிந்தபின் மைதானத்தில் இருந்த இருக்கைகளை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் பிடுங்கி பாகிஸ்தான் ரசிகர்களை தாக்கியதும் அப்போது வைரலானது.. அதேபோல மைதானத்திற்கு வெளியேவும் பாகிஸ்தான் ரசிகர்களையும் அவர்கள் தாக்கியதால் சார்ஜா மைதானமே போர்க்களமாக மாறியது..
இந்த சம்பவத்திற்கு பலரும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் நடந்து கொண்டதை தவறானது என்று தெரிவித்து வந்தனர் அதேபோல தங்களது நாட்டிலேயே கிரிக்கெட் பயிற்சிகளை செய்துவிட்டு தங்களிடமே அப்படி நடந்து கொள்ளும் உங்களுக்கு சூப்பர் ஸ்டார்கள் என்று நினைப்பா? என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாண்டட் காலத்திற்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்ற வகையில் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் அந்த சம்பவங்கள் நடந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், நேற்றைய போட்டியில் பாகிஸ்தானை பந்தாடி இலங்கை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதை அடுத்து இலங்கை வெற்றியை தங்கள் நாட்டு வெற்றி போல தெருக்களில் இறங்கி கோலாலமாக கொண்டாடி தீர்த்தனர்.. குறிப்பாக தலைநகர் காபுலில் இரவு 12 மணியளவில் வீதியில் இறங்கி பாகிஸ்தான் தோல்வியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.
#Afghans 🇦🇫 Celebrations in Capital #Kabul , #Afghanistan to celebrate Sri Lanka's victory over Pakistan in the #AsiaCup2022Final . pic.twitter.com/8ZnFkN5aKv
— Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) September 11, 2022