குஜராத் மாநிலத்தில் இரண்டாவது முறையாக 16 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து அரை கிலோ முடி உருண்டை அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் காட்டாடி பகுதியைச் சேர்ந்த 11 வகுப்பு படிக்கும் மாணவியின் தாயார் வீட்டு வேலை பார்த்து வருகிறார். சிறுமியின் தந்தை கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். கடந்த சில நாட்களாக சிறுமி உணவு சாப்பிட மறுத்ததுள்ளார். மேலும் இவரின் உடல் எடையும் குறைந்து கொண்டே வந்துள்ளது. இதனால் பயந்து போன சிறுமியின் குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில்முடி இருப்பதாக கண்டு பிடித்தனர். அறுவை சிகிச்சை செய்து அதனை வெளியில் எடுத்தனர். சிறுமியின் வயிற்றில் இருந்து சுமார் அரை கிலோ முடி அகற்றப்பட்டது.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது: “சிறுமிக்கு இது போன்று அறுவை சிகிச்சை நடப்பது முதல் முறை கிடையாது இரண்டாவது முறை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே காரணத்தினால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுமிக்கு மன அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக முடி சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீப்பில் உள்ள முடிவாக இருந்தாலும் அதனை சேகரித்து வைத்து சாப்பிடுவார். இந்த குறைபாட்டிற்கு ட்ரைக்கோபெசோவர் என்று பெயர். முதல் முறை நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுமிக்கு முறையாக மனநல சிகிச்சை அளிக்காமல் விட்டது தான் தற்போது மீண்டும் இந்த பிரச்சினை ஏற்பட்டதற்கு காரணம். சிறுமிக்கு முறையான மனநல சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.