சாந்தம்பூர் ஏரியில் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் கீழ்சாத்தம்பூர் கிராமத்துக்கு உட்பட்ட ஏரியில் ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண்வெட்டி கடத்தப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள் வந்தார்கள்.
இவர்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டார்கள். பின் அங்கு சென்று பார்த்தபொழுது எந்திரங்கள் மூலமாக நான்கு டிப்பர் லாரிகளில் மண்வெட்டி கடத்த முயன்றது தெரிய வந்தது. இதன்பின் தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் தாசில்தார் உத்தரவின் பேரில் பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 4 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.