சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கி உள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக சிபிஐ டெல்லி மண்டல சிறப்பு குற்றப்பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளனர். ஜெயராஜ் பென்னிக்ஸ் காவலில் மரணித்த கோவில்பட்டி கிளை சிறைக்கு சென்று சிறைத்துறை அதிகாரிகளை உடனிருந்த கைதிகளையும் விசாரிக்க உள்ளனர். அப்போது தந்தை மகன் இருவரும் அடைக்கப்பட்ட சிறை ஆவணங்களையும் நகல் எடுப்பார்கள் என கூறப்படுகிறது. ஜெயராஜ் பென்னிக்ஸ் சிகிச்சை அளித்த கோவில்பட்டி அரசு மருத்துவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
உடற்கூறு ஆய்வு செய்த பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தும் .கோவில்பட்டி குற்றவியல் நடுவர் பாரதிதாசன் சமர்ப்பித்த முதல் கட்ட விசாரணை அறிக்கையை பெறும் சிபிஐ சாத்தான்குளம் காவல் நிலையம் ஜெயராஜ் பென்னிக்ஸ் இன் கடை ஆகியவற்றை பார்வையிட்டு அவர்களின் குடும்பத்தார் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். சிறையில் உள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோரிடம் முறையான நீதிமன்ற அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரிப்பார்கள். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அனைத்து காவலர்கள் போலீஸ் நண்பர்கள் குழு உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்வார்கள். இது போன்ற குற்ற வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி இருப்பதால் சிபிஐ விசாரணை விரைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .