சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறை தாக்கியதில் இருவரும் உயிரிழந்திருக்கின்றனர். இந்த இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுவனேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த சூழலில் இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிபிஐ தரப்பு வழக்கில் முதற்கட்டமாக 2027 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் அளவிலான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த குற்ற பத்திரிக்கையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் 2020 ஆம் தேதி ஜூன் 19ஆம் தேதி மாலை காமராஜர் பஜாரில் இருந்து ஜெயராஜ் சட்டவிரோதமாக அழைத்துச் சென்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதன் பின் தந்தை மகன் இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்திருக்கின்றது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சுவர்களிலும், தரைகளிலும் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் போன்றோரின் ரத்தங்கள் படிந்ததை அடுத்து அதனை சுத்தப்படுத்துமாறு காவல்துறை அதிகாரிகளால் பென்னிக்ஸ் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் ரத்தக்கரை படிந்த துணிகளை கண்டுபிடித்தால் பிரச்சனை வந்துவிடும் என்ற பயத்தில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இருவரின் துணிகளை மருத்துவமனையில் வைத்து காவல்துறையினர் கட்டாயப்படுத்தி மாற்ற செய்திருக்கின்றனர்.
அவர்கள் துணிகளை மாற்றிய பின் இரத்தக்கரை படிந்த துணிகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கின்றார்கள். இந்த தகவல்களை கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சாத்தான் குளம் சுவர்களில் இருந்த ரத்த கரை மற்றும் லத்தியில் இருந்த ரத்த கரை போன்றவை தடவியல் ஆய்வு முடிவில் உறுதியாக இருக்கிறது. அதனால் சிபிஐ குற்றச்சாட்டு உறுதியாகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன்,ரகுவனேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை முத்துராஜா, செல்லதுரை போன்றோர் காவல் நிலையத்தில் தந்தை மகன் இருவரையும் கொடுமைப்படுத்தியுள்ளது விசாரணையில் உறுதியாகி உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட காவல்துறையினருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என பென்னிக்ஸ் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.