ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் வளையக்கார வீதியை சேர்ந்த செல்வராஜன்(76) என்பவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். இதனை அடுத்து செல்வராஜன் தான் கொண்டு வந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் மின்வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். எனக்கு வீரப்பம்பாளையம் பிரிவு பகுதியில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள 47 சென்ட் நிலம் இருக்கிறது.
இந்த நிலத்தை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்தனர். இது தொடர்பான வழக்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் நிலத்தை அளந்து தர வேண்டும் என கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்று நேரடியாக மனு அளித்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே எனது நிலத்தை அளந்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வராஜன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுன்னி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுவை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்