சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து சாக்கு முட்டைகளுடன் வெளியே வந்த ஒரு நபரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது சாக்குமூட்டையில் 4 1/2 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம் என்பதும், இவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரேம் திருப்பதியில் இருந்து விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை பேருந்து மூலம் கடத்தி வந்துள்ளார். இவருக்கு புகழேந்தி என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து பிரேம் மற்றும் புகழேந்தி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.