சாலையை கடக்க முயன்ற மாற்றுத்திறனாளி மூதாட்டியை இடித்துவிட்டு கார் நிற்காமல் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அவர் மெதுவாக ஊர்ந்து சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று அந்த மூதாட்டியை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் இதை பார்த்த மக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து விபத்து ஏற்படுத்திய காரின் ஓட்டுநரை தேடி வருகின்றனர். அந்த சாலையைக் கடப்பதற்கு அங்கிருந்த மக்கள் யாராவது அவருக்கு உதவி செய்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருந்திருக்கலாம். இப்போது நம் நாட்டில் மனித நேயம் என்பது அனைவரிடத்திலும் கேள்விக்குறியாகவே உள்ளது.