உஜ்ஜைன் எம்பி அனில் ஃப்ரோஜியா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்று 32 கிலோ உடல் எடையை குறைத்து கோடிக் கணக்கிலான தொகையை பரிசாக பெற்றுள்ளார். இது தொடர்பாக அனில் ஃப்ரோஜியா கூறியதாவது, இந்திய பிரதமர் நரேந்திரமோடி சென்ற 2019ஆம் வருடம் ஃபிட் இந்தியா இயக்கத்தை துவங்கினார். இதன் முக்கியமான நோக்கம் மக்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதே ஆகும். இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரி பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது, உஜ்ஜைன் எம்.பி அனில் ஃப்ரோஜியா இழக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் ரூபாய்.1000 கோடி உஜ்ஜைனின் வளர்ச்சி பணிக்கு தருவதாக கூறினார்.
அவரது சவாலை ஏற்று நான் கடும் உடற்பயிற்சி செய்து கிட்டத்தட்ட 32 கிலோ எடையை குறைத்து இருக்கிறேன். இதனால் மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்தவாறு நிதியை அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் தான் உடல் எடையை இழக்க செய்தவற்றையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, அதிகாலையில் 5:30 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி, ஓடுதல் மற்றும் யோகா ஆகிய பயிற்சிகளை செய்வாராம். ஆயுர்வேத முறைப்படி உணவுகளை சாப்பிடுவதாகவும், காலை மற்றும் இரவில் சாலட், பச்சைகாய்கறிகள் மற்றும் 1 ரொட்டி மட்டுமே சாப்பிட்டும், இடையில் கேரட் சூப் (அல்லது) உலர் பழங்களை சாப்பிட்டும் தன் எடையை குறைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அனில் ஃப்ரோஜியா கூறியதாவது, உஜ்ஜைனின் வளர்ச்சிப்பணிக்காக அதிகமான பட்ஜெட் ஒதுக்கினால் நான் எவ்வளவு வேண்டுமானாலும் எடையை இழக்க தயாராக இருக்கிறேன். உடல் எடையை குறைத்தது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து பேசியதாகவும், அவர் அதனை கேட்டு மிகவும் மகிழ்ச்சியுற்று ரூபாய்.2,300 கோடியை உஜ்ஜைன் வளர்ச்சி பணிக்கு ஒதுக்குவதாக ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் உஜ்ஜைன் எம்பி அனில் ஃப்ரோஜியா கூறியுள்ளார்.