இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிகர் சரத்குமாரை வைத்து 9 படங்கள் இயக்கியிருக்கிறார் .
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு காலத்தில் இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அதிகம் நடித்த நடிகர் சரத்குமார் தான். இதுவரை இவர் நடிகர் சரத்குமாரை வைத்து 9 படங்கள் இயக்கியிருக்கிறார். அதன்படி கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமார், விஜயகுமார் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 1992-ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், நெப்போலியன், ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் ஊர் மரியாதை படம் வெளியானது. இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த 1993-ஆம் ஆண்டு பேண்ட் மாஸ்டர் படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சரத்குமார், ரஞ்சிதா, விஜயகுமார், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை படத்தில் சரத்குமார் அண்ணன்- தம்பி என இரு வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் அண்ணன், தம்பி பாசத்தை மையப்படுத்தி நட்புக்காக திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சரத்குமார், விஜயகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன்பின் சரத்குமார் நடிப்பில் வெளியான பாட்டாளி, சமுத்திரம், பாறை, ஜக்குபாய் ஆகிய படங்களை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.