பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபரை பஞ்சாப் முதலமைச்சராக நியமித்த முடிவை காங்கிரஸ் கட்சி திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி மீது கடந்த 2018 ஆம் ஆண்டு மீ டூ சர்ச்சை எழுந்தபோது பாலியல் குற்றச்சாட்டில் எழுந்ததாகவும் இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததாகவும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக அப்போது போராட்டங்கள் நடைபெற்றதாகவும், ஆனால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ரேகா ஷர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் உள்ள கட்சி பாலியல் வழக்கில் சிக்கிய ஒரு நபரை மாநில முதலமைச்சராக நியமித்து இருப்பது பெண்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் எனவும், இதனால் சரண்ஜித் சிங் சன்னியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் திருமதி சோனியா காந்தியை ரேகா ஷர்மா வலியுறுத்தியுள்ளார்.