உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருந்து வரவேண்டிய சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் தேங்கி நிற்பதால் எண்ணெய் விலை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன. இதன் விளைவாக துறைமுகங்களில் சுமார் 3,80,000 டன் சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் தேங்கியுள்ளன. இந்த சரக்குகளின் விலை சுமார் 570 மில்லியன் டாலர் ஆகும். மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவேண்டிய சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் தேங்கி நிற்பதால் மற்ற நாடுகளிலிருந்து சோயா எண்ணெய், பாமாயில் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதனால் அடுத்த சில வாரங்களுக்கு சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் வந்து சேராவிட்டால் இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என தொழில் துறையினர் கூறுகின்றனர். மேலும் பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு கருங்கடல் பகுதியில் இருந்து 510,000 டன் சூரியகாந்தி எண்ணெய் இந்தியாவுக்கு வர வேண்டும். தற்போது இந்தியாவிற்கு 1,30,000 எண்ணெய் வந்து சேர்ந்துவிட்டன. மேலும் மீதமுள்ள சரக்குகள் பல்வேறு துறைமுகங்களில் தேங்கி உள்ளன.
மேலும் மலேசியாவிலிருந்து பாமாயில் மற்றும் அமெரிக்காவிலிருந்து சோயா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சோயா எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் விலை தற்போது அதிகமாக விற்கப்படுகிறது. இதனால் விரைவில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இல்லத்தரசிகள் பெரிதும் அவதிப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.